ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண இண்டர்நேஷனல் லீக் டி20 (ஐ.எல்.டி) கிரிக்கெட் போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான கல்ப் ஜயண்ட்ஸ் அணி முடி சூடியதுடன், வனிந்து ஹசரங்க பங்கேற்றிருந்த டெசர்ட் வைப்பர்ஸ் அணி உப சம்பியனானது.
6 அணிகள் பங்கேற்றிருந்த இப்போட்டித் தொடரில், டெசர்ட் வைப்பர்ஸ் அணியும், கல்ப் ஜயண்ட்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடியிருந்தது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிறன்று இரவு நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெசர்ட் வைப்பர்ஸ் அணி 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தது. இந்நிலையில் 5 ஆவது விக்கெட்டுக்காக சேம் பில்லிங்ஸுடன் ஜோடி சேர்ந்த வனிந்து ஹசரங்க அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
இந்த ஜோடி 37 பந்துகளில் 72 ஓட்டங்களை பகிர்ந்திருந்தவேளை, பில்லிங்ஸ் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிந்தார். இதையடுத்து அதிரடியாக விளையாடியிருந்த ஹசரங்க ஆட்டமிழக்க, பெரிய ஓட்ட இலக்குக்கான வைப்பர்ஸ் அணியின் நம்பிக்கை தளர்ந்தது. ஹசரங்க 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 148 ஓட்டங்களை டெசர்ட் வைப்பர்ஸ் அணி குவித்தது. பந்துவீச்சில் கார்லொஸ் பிரெத்வெ்ய்ட் 3 விக்கெட்டுக்களையும், குவைஸ் அஹமட் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கல்ப் ஜயண்ட்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த 149 ஓட்டங்களை குவித்து 7 விக்கெட்டுக்களால் வென்று சம்பியன் பட்டத்தை வென்றது. ஒரு கட்டத்தில் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து சற்று தடுமாறியிருந்த ஜயண்ட்ஸ் அணிக்கு கிறிஸ் லின், ஜெராட் எரஸ்மஸ் இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
அவ்வணி ஸ்திரமான நிலையை எட்டியிருந்தவேளை, எரஸ்மஸ் 30 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். இதையடுத்து அதிரடிகாட்டிய கிறிஸ் லின் 72 ஓட்டங்களையும், ஹெட்மயர் 25 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பந்துவீச்சில் ஹசரங்க, லூக் வூட், டொம் குரான் ஆகிய மூவரும் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
ஜயண்ட்ஸ் அணி வீரர்களான கார்லொஸ் பிரெத்வெய்ட் போட்டியின் நாயகனாகவும், கிறிஸ் ஜோர்டன் தொடரின் நாயகனாகவும் தெரிவாகினர்.