வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்! மூடப்பட்டது ஈபிள் டவர்
ஐரோப்பிய கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை நேரலையைக் காண்பதற்காக ஈபிள் டவர் அருகே குவிந்திருந்த ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய கால்பந்து தொடர் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பிரான்ஸ்- போர்த்துக்கல் அணிகள் மோதின.
இந்தப் போட்டிக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால் போட்டி நடைபெற்ற மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
எனவே போட்டியை நேரடியாக காண முடியாத ரசிகர்களுக்காக ஈபிள் டவருக்கு கீழே மெகா ஸ்கிரீன் அமைத்து போட்டி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
கிட்டதட்ட 90 ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த இடத்தில் இரு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.
அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் ரசிகர்கள் வந்ததால் ஏராளமான ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் பிரச்சனை கிளம்பியது.
இந்நிலையில் போட்டியை காண முடியாத ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்கள் பலர் ரகளையில் ஈடுபட்டனர். பொலிசார் மீது பாட்டில்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
இதையடுத்து பொலிசாருக்கும், இரு நாட்டு ரசிகர்களுக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறையில் ஈடுபட்டதாக 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வன்முறை சம்பவத்தால் ஈபிள் டவர் இன்று மட்டும் மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணி 1-0 என பிரான்சை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.