‘வடசென்னை’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி
‘விசாரணை’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘வடசென்னை’. இப்படத்துக்காக சென்னை மத்திய சிறைச்சாலையை அரங்கமாக அமைத்திருக்கிறார்கள். முதற்கட்டமாக பெரும் பகுதி படப்பிடிப்பு இந்த அரங்கில் தான் நடைபெற இருக்கிறது.
தனுஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கும் இப்படத்தை தனுஷ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கிறது. நாயகி பொறுப்பில் இருந்து சமந்தா விலக, அவருக்குப் பதிலாக அமலாபாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நாயகனாக நடித்தவர் விஜய் சேதுபதி.
‘வடசென்னை’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தது. தற்போது அதனை தனுஷ் உறுதிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.













