இந்திய ரயில்வே துறையின் கேட்டரிங் சேவை குறித்த அறிக்கையை சிஏஜி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. அதில் ரயில்வேயால் வழங்கப்படும் உணவு, மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரயில் பயணம் செய்பவர்கள், ரயில்வே கேட்டரிங் சார்பில் விற்பனை செய்யப்படும் உணவுகளைத்தான் பெரும்பாலும் சாப்பிடுகின்றன. சுடச்சுட ரயில்வே சார்பில் தயாரித்து வழங்கப்படும் உணவுகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர்.
இட்லி, சப்பாத்தி, பிரியாணி என பல உணவுகள் கேட்டரிங் சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. பல நேரங்களில் உணவுகள் தரமாக இருப்பதில்லை என்ற புகார்களை பயணிகள் தெரிவித்தனர்.
ரயில்களில் பயணக்கட்டணம் மறைமுகமாக ஏற்றப்படுகிறது. தட்கல், பிரீமியம் தட்கல், சிறப்பு ரயில் கட்டணம் என பலவிதமாக வசூலித்தாலும் பயணிகளுக்கு எந்த வசதியும் கிடைப்பதில்லை என்பதுதான் வேதனை. ஒரு பக்கம் கரப்பான்பூச்சி ஓடும், கொசுக்கடி தாங்க முடியாது.
எலிகள் குடும்பம் நடத்தும் கண்களை மூடி தூங்கினால் தூக்கம் வராமல் எலிகள்தான் கனவுகளில் வரும்.ரயில்களில் சுத்தம் பேனப்படுவதில்லை என புகார்கள் எழுந்தன. இதனையடுத்து சிஏஜி அணி மற்றும் ரயில்வே நிர்வாகிகள் இணைந்து 74 ரயில் நிலையங்களில் உள்ள 80 ரயில்களில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர்.
உணவுத் தரத்தில் பல குறைபாடு இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தது என்றும் சிஏஜி அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.சிஏஜி வெளியிடும் இந்த அறிக்கையில், ரயில்வேயால் வழங்கப்படும் உணவு, மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல.
ரயில்வேயில் வழங்கப்படும் உணவுகள் கெட்டுப் போனவையாகவும், பழையவற்றை சூடேற்றி வழங்கப்படுவதாகவும், பேக்கேஜ்கள் மற்றும் பாட்டிலில் விற்கப்படும் பொருட்கள் காலாவதியானவையாகவும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரயில்வேயால் வழங்கப்படும் உணவுகள் மூடி வைக்கப்படுவதில்லை,வெளியில் விற்கப்படும் பொருட்களை விட ரயில் நிலையங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.வெளியில் விற்கப்படும் அளவை விட குறைவான அளவே உணவு வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் ஒரு பொருள் வாங்கும்போது அதற்கான பில் பயணிகளுக்கு அளிக்கப்படுவதில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளது.ரயில்களில் சுத்தம், சுகாதாரம் பேணப்படுகிறதா என முறையாக ஆய்வும் செய்வதில்லை. குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவதில்லை, ரயில் பெட்டிகளில் கரப்பான்பூச்சிகள், எலிகள், தூசுகள், பூச்சிகள், கொசுக்கள், ஈக்கள் நிறைந்துள்ளன என சிஏஜி குழு தெரிவித்துள்ளது.