இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜுக்கு பிஎம்டபிள்யூ காரை, தெலங்கான பாட்மிண்டன் சங்க துணைத் தலைவர் வி.சாமுண்டேஷ்வர்நாத் பரிசாக வழங்கினார்.
இதற்கான விழா ஹைதராபாத் கச்சிபவுலியில் உள்ள கோபிசந்தி பாட்மிண்டன் அகாடமியில் நடைபெற்றது. சாமுண்டேஷ்வர்நாத் கூறும்போது, “மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து மிதாலி ராஜ் சாதனை படைத்ததும், அவருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கப்படும் என நாங்கள் அறிவித்தோம். வாக்குறுதி கொடுத்தபடி தற்போது வழங்கி உள்ளோம்” என்றார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது மிதாலி ராஜ், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்ற பெருமையும் அவருக்கு உண்டு. மிதாலி ராஜுக்கு சொகுசு காரை சாமுண்டேஷ்வர்நாத் பரிசாக வழங்குவது இது 2-வது முறையாகும். கடந்த 2005-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்ற போதும் மிதாலி ராஜை, அவர் பாராட்டி காரை பரிசாக வழங்கியிருந்தார்.
இதுமட்டும் அல்லாது ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ஜிம்னாஸ்டிக்கில் 4-வது இடம் பிடித்த தீபா கர்மகார், பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் உள்ளிட்டோருக்கும் அவர்களது திறமையைப் பாராட்டி கார்களை பரிசாக ஏற்கெனவே சாமுண்டேஷ்வர்நாத் வழங்கி உள்ளார். – பிடிஐ