அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் இன்று ஆரம்பிக்கவுள்ளார்.
முதலில் இந்தியா செல்லும் அவர் அதையடுத்து கொழும்புக்கு பயணம் மேற்கொள்வார்.
இந்தப் பயணத்தின் போது அவர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, விஞ்ஞான மற்றும் சக்தி வளங்களில், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பான பேச்சுக்களில் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்தவுள்ளார்.
சிறிலங்காவில் டெங்கு எதிர்ப்பு நடவடிக்கைக்கான அவுஸ்ரேலியாவின் உதவிகளை தாம் சிறிலங்கா அதிபரிடம் அறிவிக்கவுள்ளதாகவும், நீண்டகால பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு முக்கியமான நல்லிணக்க செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக அவருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.