கல்முனை, சவலகடே, சம்மாந்துரை ஆகிய பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அப்பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதேசத்தின் பாதுகாப்பில் பொலிஸாரும், பொலிஸ் அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பிரிவினருக்கு கிடைக்கும் சகல இரகசிய தகவல்களும் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாதுகாப்பை வழங்க நாம் முழுமையான முறையில் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
தமக்குக் கிடைத்த தகவல் குறித்து உடனடியாக செயற்பட்டதன் விளைவாகத்தான் இப்பகுதியில் இவ்வளவு பாரிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடியுமாக இருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்பொழுது அப்பகுதி வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ள சடலங்கள் யாவும், சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டனவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனவா? என பேச்சாளரிடம் கேட்கப்பட்டதற்கு,
இல்லை, சற்று முன்னர் தான் இவை கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்னும், அந்த சடலங்கள் அவ்விடங்களில் அப்படியே காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

