அந்தாள ராக்சஷி தெலுங்கு படத்தின் மூலம் புகழ்பெற்றவர் லாவண்யா திரிபாதி. தற்போதும் தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது ஏ1 என்ற தெலுங்கு படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
ஆனால் லாவண்யா திரிபாதியால் தமிழில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. அவர் அறிமுமான பிரம்மன் படம் பெரிதாக போகவில்லை. அதன் பிறகு நடித்த மாயவன் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் 3 வருட இடைவெளிக்கு பிறகு தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். அதர்வா முரளி ஹீரோ. இதில் 100 படத்திற்கு பிறகு அதர்வா மீண்டும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். அவரது ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார்.
“வழக்கமாக ஹீரோவை காதலித்து, டூயட் பாடுகிற கேரக்டர் இல்லை லாவண்யாவுக்கு, அழகானவராகவும் இருக்க வேண்டும், வலிமையானவராகவும் இருக்க வேண்டும் என்ற நாங்கள் தேடியதில் அமைந்தவர்தான் லாவண்யா. ஹீரோ மட்டுமல்ல ஹீரோயினும் வில்லனை எதிர்த்து நிற்க வேண்டும். அப்படியான கதை இது. அதற்கு பொருத்தமானவராக லாவண்யா இருப்பார்” என்கிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
