தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் தலைமையிலான நிர்வாகிகள் பதவி வகித்து வந்தனர். இந்த நிர்வாகம் மீது புகார்களும், அதிருப்தியும் நிலவியதாலும், வழக்கு தொடரப்பட்டதாலும் அன்றாட பணிகளை கவனிக்க தமிழக அரசு சிறப்பு தனி அதிகாரியை நியமித்தது. இந்த நிலையில் வருகிற ஜுன் மாதத்திற்குள் தேர்தலை நடத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு தேர்தல் அதிகாரியையும் நியமித்தது.
இந்த நிலையில் “தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த வேண்டாம். நிர்வாகிகளை போட்டியின்றி தேர்ந்தெடுக்கலாம்” என்று சங்கத்தின் முன்னாள் தலைவர்கள வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சங்கத்தின் முன்னாள் தலைவர்களான பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கே.முரளிதரன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:
பாரம்பரியமிக்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தற்போது பாழ்பட்டு கிடக்கிறது. 7 கோடி ரூபாய் வரை நிதி வசதி கொண்டிருந்த சங்கம் தற்போது பணமின்றி இருக்கிறது. முந்தைய நிர்வாகம் செய்த தவறுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களிடம் ஒற்றுமை இல்லாததால், தகுதி இல்லாதவர்கள் நிர்வாகத்துக்கு வந்து சங்கத்தை சீரழித்து விட்டார்கள்.
இந்நிலையில் தேர்தல் நடத்தச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தேர்தல் நடத்துகிற அளவிற்குகூட சங்கத்தில் நிதி இல்லை. தேர்தல் நடந்தால் போட்டியிடுகிறவர்கள் பணத்தையும், பரிசு பொருளையும் வாரி இறைப்பார்கள். ஜெயித்து வந்த பிறகு அந்த பணத்தை எடுக்க முறைகேடு செய்வார்கள். இதனை தடுக்க தேர்தல் இன்றி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும்.
இதற்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். நல்லவர்கள், நியாமானவர்கள், நிர்வாக திறமை உள்ளவர்கள் பொறுப்புக்கு வரவேண்டும். இப்படிச் சொல்வதால் எங்களுக்கு பதவி ஆசை என்று யாரும் நினைக்க வேண்டாம். நாங்கள் யாரும் எந்த பொறுப்புக்கும் வரமாட்டோம் என்று இப்போதே உறுதி அளிக்கிறோம். என்றார்கள்.

