தமிழ் சினிமாவின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று சாந்தி தியேட்டர். ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதியிடமிருந்து சிவாஜி வாங்கினார். அதன் பிறகு சிவாஜி நடித்த படங்கள் மட்டும் திரையிடப்பட்டது. சிவாஜி சினிமாவில் நடிப்பதை குறைத்த உடன் மற்ற படங்கள் திரையிடப்பட்டது. பிரபு நடித்த படங்கள், சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படங்கள், விக்ரம் பிரபு நடிக்கும் படங்கள் திரையிடப்பட்டன. ரஜினி நடித்த சந்திரமுகி படம் 800 நாட்களை தாண்டி ஓடியதும், சிவாஜி நடித்த திரிசூலம் ஒரு வருடம் தாண்டி ஓடியதும் சாந்தி தியேட்டரில்தான்.
ஒரு காலத்தில் வெளியூரில் இருந்து சென்னை வரும் ரசிகர்களுக்கு சிவாஜியின் சாந்தி தியேட்டர் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டாக இருந்தது. காலத்துக்கு ஏற்ப தியேட்டரில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. குளிர்பதன வசதி, நவீன ஆடியோ சிஸ்டம், சொகுசு இருக்கைகள் எடுப்பான முகப்பு தோற்றம் என பல மாற்றம் கண்டது சாந்தி தியேட்டர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டரை இரண்டாக பிரித்து சாய் சாந்தி தியேட்டர் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் 2016, மே 15க்கு பிறகு தியேட்டரில் படம் திரையிடப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தியேட்டரை இடித்துவிட்டு வணிக வளாகத்துடன் கூடிய தியேட்டர் கட்டப்பட இருப்பதாக பிரபு முன்பு தெரிவித்தார். ஆனால் இப்போது தியேட்டர்கள் எதுவும் இன்றி முழுக்க முழுக்க அலுவலக தேவைக்கான இடமாக மாற்றப்பட்டுள்ளது. 6 மாடிகள் கொண்ட இந்த வளாகத்தின் மொத்த பரப்பளவு 87 ஆயிரம் சதுர அடி.
பிரபு கூறுகையில், தியேட்டர் உடன் கூடிய கட்டடத்தை கட்டவே முடிவு செய்தோம். ஆனால், ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்காக அலுவலக கட்டடமாக கட்டப்பட்டுள்ளது. பெரிய ஐடி., நிறுவனங்களுக்கு இந்த இடம் உபயோகமாக இருக்கும் என்றார்.
சாந்தி தியேட்டர் போன்று ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தியேட்டர்கள் அடையாளங்களாக இருந்தன. ஆனால் இன்றைக்கு சினிமா இருக்கும் நிலையில் தியேட்டர்கள் நடத்துவது கடினம் என்பதை சிவாஜி குடும்பத்தினர் நன்கு உணர்ந்து இந்த முடிவை எடுத்திருந்தாலும் சென்னைக்கு அடையாளமாக திகழ்ந்த இந்த தியேட்டர், பல சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தை அளிக்கும்.
