ஹிந்தியில் வெளியாகியுள்ள, ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் படத்தை, நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு வெகுவாக பாராட்டி உள்ளார்.
தேசிய விருது பெற்ற நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள, சுப் மங்கள் ஸ்யாதா சாவ்தான் என்ற, ஹிந்திப் படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில், இப்படத்திற்கு தடை விதித்துள்ளனர். இதில், நடித்த ஆயுஷ்மான் குரானா, ஜிதேந்திரகுமார் இருவரும் முத்தமிடும் காட்சிகள் விமர்சனத்திற்கு உள்ளாகின.
இந்நிலையில், இந்த படத்தை, நடிகையும், காங்., தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, டுவிட்டரில் வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: படத்தை எடுத்தவர்களுக்கு பாராட்டுகள். இயக்குனர் ஹிதேஷ் கேவல்யா இக்கதையை சிறப்பாக கையாண்டுள்ளார். இப்படி ஒரு படத்தை எடுத்தவர்கள் பெருமைப்பட வேண்டும். ஆயுஷ்மான் சினிமாவில், புதிய பாதையை திறந்துள்ளார். வித்தியாசமாக யோசிக்க ஊக்குவித்துள்ளீர்கள். மூடி வைக்கப்பட்ட கதைகளை, பரிசோதித்து பார்க்க கதாசிரியர்கள் தயாராக இருக்கின்றனர். நவீன சினிமாவுக்கு புதிய பெயர் கிடைத்துள்ளது. இப்படம் நல்ல கலைப்படைப்பு. நடித்த அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம். என கூறியுள்ளார்.

