பிகில் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில், விஜய்யுடன், மாளவிகா மோகனன், வி.ஜெ.ரம்யா, கவுரி கிஷன், விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் படபிடிப்பு டில்லி, பெங்களூரு, சென்னை, நெய்வேலி உள்ளிட்ட பல இடங்களிலும் நடந்திருக்கிறது.
இந்தப் படத்தில் இடம் பெறும் குட்டி ஸ்டோரி என்ற பாடலை, இயக்குநர் அருண் ராஜா காமராஜ் எழுத, அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடிய ஒரு பாடல், பிப்., 14ல் ரிலீஸ் ஆனது. பத்து நாட்களில் அந்தப் பாடல், இணையத்தில் 21 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இணையத்தில் இந்தப் பாடலை பார்த்த ஹாலிவுட் நடிகர் பில் டியூக், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும், பாடலை பாடிய நடிகர் விஜய்க்கும் தன்னுடைய வாழ்த்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார். அதற்கு, இயக்குநர் லோகேஷ் நன்றி என தெரிவித்திருக்கிறார்.

