பிக்பாஸ் – சீசன் 3 நிகழ்ச்சியில் பதினாரு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகர் தர்ஷன். அவருக்கு டைட்டில் வின்னர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், முகேன் ராவ், டைட்டில் வின்னராகி விட்டார். இருந்த போது, நடிகர் தர்ஷனின் திறமைகளை பாராட்டிய நிகழ்ச்சித் தொகுப்பாளரான நடிகர் கமல், தனது ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பேனரில் தர்ஷனுக்கு ஒரு படம் தயாரிக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், தன்னுடைய புதிய படம் குறித்து, தர்ஷன், இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததுமே, எனக்கும் பட வாய்ப்புகள் நிறையவே வந்தன. இத்தனை நாட்களும், எத்தனையோ கதைகளைக் கேட்டேன். ஆனால், அவற்றில் ஒரு கதை மட்டும் தான், என் இதயத்தின் ஆழம் வரை சென்றது. எனவே, அந்தக் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிப்பது என முடிவெடுத்தேன். இந்தப் படம், ஒரு புதிய ஹீரோவின் அறிமுகப் படமாக இருக்காது. அந்தளவுக்கு இந்தப் படத்தின் டீம் மீது, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் யார் என்று, இப்போது சொல்ல விரும்பவில்லை. இன்னும் சில நாட்களில் நான் நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும். அப்போது, எல்லாமே வெளியே தெரியும்.
இவ்வாறு தர்ஷன் கூறியிருக்கிறார்.
அதில், தனக்காக கூடவே இருந்து பிரார்த்திக்கும் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

