2020ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி இன்னும் மூன்று நாட்களில் முடிய உள்ளது. மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஜனவரி 31ம் தேதி ஐந்து நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளது.
‘டகால்டி, நாடோடிகள் 2, மாயநதி, சர்வர் சுந்தரம், உற்றான்’ ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ‘டகால்டி, சர்வர் சுந்தரம்’ ஆகிய இரண்டு படங்களிலும் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார். இன்று மாலைக்குள் ‘சர்வர் சுந்தரம்’ படம் ‘டகால்டி’யுடன் போட்டி போடுமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமுத்திரக்கனி, சசிகுமார் கூட்டணியில் ‘நாடோடிகள் 2’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டது. மிகவும் தாமதமாக மற்ற பணிகளை முடித்து படத்தை வெளியிடுகிறார்கள். முதல் பாகம் ஏற்படுத்திய எந்த ஒரு பரபரப்பையும் இந்தப் படம் இதுவரை ஏற்படுத்தவில்லை.
சிறிய பட்ஜெட் படங்களான ‘மாயநதி, உற்றான்’ ஆகிய படங்களும் அன்றைய தினம் களத்தில் குதிக்கின்றன.
ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகின. இரண்டாவது வாரத்தில் ‘தர்பார்’, மூன்றாவது வாரத்தில் ‘பட்டாஸ்’ வெளிவந்தன. கடைசி நான்காவது வாரத்தில் மீடியம் மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன.

