தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய, விஷால் தரப்பு முடிவு செய்துள்ளது.
நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019, ஜூன் 23ல் நடந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணுவதற்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில், எங்களை ஓட்டளிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர்களில் இருக்கும் உறுப்பினர்கள், தபால் மூலம் ஓட்டளிப்பதற்கான படிவம் கொடுக்கப்படவில்லை. ஏகப்பட்ட குளறுபடிகள் இந்த தேர்தலில் நடந்துள்ளது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் முறையிட்டனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி சார்பில் வழக்கு தொடுத்திருந்தனர். அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.
அதில், கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. 3 மாதத்துக்குள் வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும். இத்தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். மறுதேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த சிறப்பு அதிகாரியான கீதா நிர்வகிப்பார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாசர் தலைமையை எதிர்த்துப் போட்டியிட்ட ஐசரி கணேஷ், பாக்யராஜ் உள்ளிட்ட சங்கரதாஸ் சுவாமிகள் அணியினர் வரவேற்றுள்ளனர். இது தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.
இந்நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாசர், விஷால் அணியினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் திங்கள்கிழமை மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

