கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த படம் லிங்கா. இதில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கி இருந்தார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார்.
விவசாயத்திற்காக சொந்த செலவில் அணை கட்டி மக்களை வாழச்செய்த ஒருவரின் கதை. இந்த கதை என்னுடைய முல்லைவனம் 999 என்ற குறும்படத்தின் கதை என்று உதவி இயக்குனர் ரவிரத்னம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10 கோடி ரூபாய் பிணைத் தொகை கட்டி படத்தை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ராக்லைன் வெங்கடேஷ், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் வழக்கு நடந்து வந்த மதுரை நீதிமன்றத்தில் தயாரிப்பாளருக்கு சாதமான தீர்ப்பு வந்துள்ளது. அந்த தீர்ப்பின் நகலை வெளியிட்டு ராக்லைன் வெங்கடேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வெளியாகியுள்ளது. எங்கள் படத்தில் இடம் பெறும் “உண்மை ஒருநாள் வெல்லும். இந்த உலகம் உன் பேர் சொல்லும்” பாடல் வரிகளைப்போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

