2020ம் ஆண்டின் முதல் பெரிய படம் என்ற பெருமையுடன் வெளிவந்த படம் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’. இந்தப் படம் வெளிவருகிறது என்றதும் மற்ற படங்கள் போட்டிக்கு வெளியாகாமல் பின்வாங்கி விட்டன. தனியொரு தமிழ்ப் படமாக உலகம் முழுவதும் கடந்த வாரம் 9ம் தேதி வெளியான ‘தர்பார்’ படம் தமிழ்நாட்டில் 100 கோடி வசூலையும், உலகம் முழுவதிலும் 200 கோடி வசூலைக் கடந்தாலும் அமெரிக்காவில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
எதிர்பார்த்த வசூல் அங்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். ‘தர்பார்’ வெளியான அடுத்த இரண்டு நாட்களில் பெரிய தெலுங்குப் படங்களான ‘சரிலேரு நீக்கெவரு, அலா வைகுந்தபுரம்லோ’ ஆகிய படங்கள் வெளியாகின. அந்தப் படங்கள் ‘தர்பார்’ படத்திற்கு கடும் போட்டியைக் கொடுத்தால் ‘தர்பார்’ வசூல் பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது.
ஜனவரி 17ம் தேதி முடிய ‘தர்பார்’ படம் 15 லட்சம் யுஎஸ் டாலர், அதாவது 10.84 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அதே சமயம் ‘சரிலேரு நீக்கெவரு’ 13.54 கோடியும், ‘அலா வைகுந்தபுரம்லோ’ 15.18 கோடியும் வசூலித்துள்ளன. கடந்த வருடம் ரஜினி நடித்து வெளிவந்த ‘பேட்ட’ படம் 25 லட்சம் யுஎஸ் டாலர், அதாவது, 17 கோடியே 75 லட்சம் வசூலித்தது. அதைவிடக் குறைவாகத்தான் ‘தர்பார்’ படம் வசூல் அமையும் என்பது எதிர்பாராத அதிர்ச்சிகரமான ஒன்று.

