மறைந்த பிரபல ஓவியர் வீரசந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ஞானசெருக்கு. தரணி ராஜேந்திரன் என்ற தஞ்சாவூர் இளைஞர் இயக்கி உள்ளார். கிரவுட் பண்டிங் முறையில் தயா£ராகி உள்ள இந்தப் படம் 40 சர்வதே திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 7 விருதுகளை பெற்றுள்ளது. தற்போது இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் தரணி ராஜேந்திரன் கூறியதாவது:
குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து அதன் மூலம் சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.. ஒரு கட்டத்தில் பெரிய படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீரசந்தானத்துடன் நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீரசந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார். படம் துவங்க இருந்த நேரத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்த சமயத்தில் விலகிவிட்டனர்.
அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பணம் போட்டு இந்த படத்தை எடுத்து முடித்தோம். க்ரவ்டு பண்டிங் முறையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. டப்பிங் முடிந்த நிலையில் ஓவியர் வீரசந்தானம் மறைவு என்னை ரொம்பவே பாதித்தது. அதன்பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்த படத்தின் வேலைகளை முடித்தேன்.
இது வெகுஜன படம்தான். இந்த படத்திலும் மூன்று ராப் பாடல்கள் இருக்கின்றன. 80 வயதில் உள்ள கலைஞனின் எழுச்சிதான் இந்த படம்.. இந்த சமூகம், அதிகார வர்க்கம் ஒரு கலைஞனை எப்படி பார்க்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது விரைவில் திரையரங்குகளில் வெளிவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

