சினிமாவில் அதிகமாக அரசியல் கதைகள் வந்து கொண்டிருப்பதைபோல சின்னத்திரை சீரியல்களிலும் அரசியல் கதைகள் வரத் தொடங்கி விட்டது. கடந்த ஜனவரி 2ந் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் உயிர் தொடர் முழுக்க முழுக்க அரசியல் கதை. குறிப்பாக அம்மா மகளுக்கு இடையே நடக்கும் அரசியல் மோதல் கதை.
மதுரை சிம்மக்கல் கவுன்சிலரான வீரலக்ஷ்மி டெரரான அரசியல்வாதி. குடும்பத்தையும் கிராமத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர். இவருக்கு அருண்பாண்டி, வேல்முருகன், பாலமுருகன் என மூன்று மகன்கள், ஒரே மகள் பவித்ரா. இவர் அம்மாவுக்கு நேர் எதிரான குணங்களை கொண்டவர். தன்னைச் சுற்றியிருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சி யாக வைத்திருக்க விரும்புகிறவர்.
நேர்மையான வேளாண்துறை அமைச்சர் செழியனுக்கு மகள் பவித்ராவை 2வது திருமணம் செய்து வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அம்மா. இதற்காக பவித்ராவின் காதலன் வருணையும் கொன்று விடுகிறார். வருணின் குழந்தை பவித்ராவின் வயிற்றில் வளர்கிறது. இதனால் அம்மாவை அரசியல் £தீயாக எதிர்க்க துணிகிறார் பவித்ரா. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பாக சொல்லும் கதை.
பவித்ராவாக மனிஷா நடிக்கிறார். வீரலக்ஷ்மியாக சோனா நாயரும், செழியனாக நடிகை நமீதாவின் கணவர் வீராவும், வருணாக கவுரவ் குப்தாவும் நடிக்கின்றனர். தொடரை நடிகை நிரோஷா மற்றும் ராதாவின் ‘பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

