ஜேஎன்யூ கல்லூரி மாணவர்கள் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக நடத்திய போராட்டத்தின்போது அதற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. அதன்பிறகு அவருக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் எழுந்தன. என்றாலும் தனது முடிவில் உறுதியாக இருந்து வருகிறார் தீபிகா. தற்போது அவர் நடித்துள்ள சப்பக் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக சன்னி லியோனும் குரல் கொடுத்துள்ளார். அதோடு, எனக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. அதனால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் வன்முறை இல்லாமல் பேசி தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள சன்னி லியோன், மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு மாணவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயத்தை அரசு போக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தீபிகா படுகோனேயைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாக சன்னிலியோனும் பேசியதை அடுத்து அவருக்கும் மாணவர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது.
ஆனால் அவர்களின் இந்த கருத்தினைத் தொடர்ந்து இப்போதெல்லாம் சினிமா தியேட்டர்களுக்கு கல்லூரி மாணவர்கள்தான் அதிகமாக செல்கிறார்கள். அதனால் அவர்களின் ஆதரவு இருந்தால்தான் தங்களது படங்கள் ஓடும் என்பதால் இப்படி நடிகைகள் தங்களது கருத்தினை அவர்களுக்கு ஆதரவாக சொல்லி வருவதாக அவர்களின் கருத்தினை சிலர் சோசியல் மீடியாவில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

