வரும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கில் மகேஷ்பாபுவின் சரிலேரு நீக்கேவரு மற்றும் அல்லு அர்ஜுனின் அல வைகுண்டபுரம்லோ ஆகியவற்றுடன் ரஜினியின் தர்பார் படமும் வெளியாக இருக்கின்றன. இதில் அதிர்ஷ்டவசமாக தர்பார் படம் 9ஆம் தேதியே வெளியாகி விடுவதால் 12ஆம் தேதி வெளியாகும் இந்த இரண்டு படங்களின் ஓபனிங்கில் பெரிய அளவு பாதிப்பு இருக்காது என்றே தெரிகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதில் மகேஷ்பாபுவின் படக்குழுவினர் தங்களது புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு சிரஞ்சீவிக்கு அழைப்பு விடுத்தனர். அவரும் தனது பிஸியான வேலைகளுக்கு இடையே அவர்களது அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசும்போது, “இந்த சங்கராந்தி பண்டிகையில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். அது மட்டுமல்ல எனது நண்பர் ரஜினியின் தர்பார் படமும் கூட பொங்கலுக்கு ரிலீஸாகிறது அந்த படமும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும்” என்று வாழ்த்தினார்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். அதுமட்டுமல்ல நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் நடிகை விஜயசாந்தி தெலுங்கு திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

