சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே முதலீடு செய்பவர்கள் ஒரு சிலர் மட்டும் தான். மீதி பேர் கல்யாண மண்டபம் கட்டுவது, ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்வது என சினிமாவுக்கு சம்பந்தமில்லாதவற்றைத்தான் செய்வார்கள்.
சிலர் சொந்தமாகப் படங்களைத் தயாரிப்பார்கள். ஆனால், அந்தப் படங்கள் ஓடினால்தான் லாபம். எனவே, தற்போது சினிமா சார்ந்த வேறு சில தொழில்களில் சில நடிகர்கள் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.
தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு, ஐதராபாத்தில் பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸ் ஒன்றின் பார்ட்னர் ஆக, கடந்த ஆண்டு மாறினார். அவரைத் தொடர்ந்து தற்போது விஜய் தேவரகொண்டாவும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றின் பார்ட்னர் ஆக மாற உள்ளார்.
மகேஷ்பாபுவுடன் இணைந்த ஏசியன் சினிமாஸ் நிறுவனம், விஜய்யுடன் இணைந்து அவரது சொந்த ஊரான மகபூப் நகரில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை கட்டி வருகிறதாம். வரும் கோடை விடுமுறையில் அதன் திறப்பு விழா இருக்கும் என்கிறார்கள்.
குறுகிய காலத்தில் தெலுங்குத் திரையுலகில் முன்னணிக்கு வந்த நடிகர்களில் விஜய் தேவரகொண்டா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

