68 வயதிலும் மலையாள ஸ்டார் மம்முட்டி வருடத்திற்கு ஐந்துக்கும் குறையாமல் படங்களில் நடித்துவரும் நிலையில், அவரது மகனும் முன்னணி நடிகருமான துல்கர் சல்மான், கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே வருடத்திற்கு இரண்டு படங்கள் என்கிற அளவிலேயே நடித்து வருகிறார்.
இந்த வருடம் துவக்கத்தில் மலையாளத்தில் இவர் நடித்த ‘ஒரு யமண்டன் பிரேமகதா’ என்கிற படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய தவறியது. அதேபோல இந்தியில் அவர் நடித்த இரண்டாவது படமான சோயா பேக்டர் படமும் ரசிகர்களை கவரவில்லை. இந்தியில் அவருக்கான ஒரு இடத்தை உருவாக்கி தருவதற்கான வெற்றியையும் பெறவில்லை.
தமிழில் அவர் ஏற்கனவே நடித்து வந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் வான் ஆகிய படங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் மற்ற மொழிகளில் இருந்து தனது கவனத்தை திசை திருப்பி, மலையாளத்தில் மட்டும் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
அதிலொன்று கேரளாவில் எண்பதுகளில் புகழ்பெற்ற கொள்ளையன் சுகுமார குறூப் என்பவனைப் பற்றிய உருவாகி வருகிறது. இந்தப்படம் வரும் 2020ல் வெளியாகும்போது துல்கர் சல்மானின் பயணத்தில் மீண்டும் ஒரு ஏற்றம் வரும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.. அந்தவகையில் இந்த 2019ஆம் ஆண்டு துல்கர் சல்மானுக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தையே தந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

