மலையாள திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்வதற்கு பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டினாலும் சில சமயங்களில் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படும்போது மிகப்பெரிய தோல்வியை சந்திப்பது உண்டு.. ஒரு சில மலையாள படங்கள் மட்டுமே விதிவிலக்காக தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றுள்ளன.. அதற்கு காரணம் மலையாளத்திற்கு மட்டுமல்லாது எந்த மொழியில் ரீமேக் செய்தாலும் பொருந்தக்கூடிய கதையம்சம் கொண்ட மலையாள படங்கள் மட்டுமே இத்தகைய வெற்றிகளை பெற்றுள்ளன. ஹிட்லர், பிரண்ட்ஸ், பாடிகார்டு, திரிஷ்யம் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இந்த நிலையில் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டிரைவிங் லைசென்ஸ் படத்திற்கும் தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் ரீமேக் ரைட்ஸ் பெறுவதற்கான போட்டி ஆரம்பித்துவிட்டது.. ஒரு சினிமா ஹீரோவுக்கும், அவரை ஆராதிக்கும் தீவிர ரசிகனுக்கும் ஏற்படும் ஈகோ யுத்தம் தான் இந்த படத்தின் கதை.. இது எந்த மொழிக்கும் எளிதாக பொருந்தக்கூடிய கதை என்பதால் இரண்டு மொழிகளிலும் உள்ள சில நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இந்த படத்தின் ரீமேக் உரிமைக்காக பேசி வருகிறார்கள் என மலையாளத் திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

