சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‛விஸ்வாசம்’ படம், இந்த ஆண்டின் பொங்கல் ரிலீசாக, கடந்த ஜன., 10ல் ரிலீசானது. நாயகியாக நயன்தாரா நடித்தார். இமான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற, அப்பா-மகள் உறவுப் பிணைப்பை அழகாக சொல்லும் ‘கண்ணானக் கண்ணே’ பாடல் மிகவும் பிரபலமடைந்தது. பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்த இப்பாடலுக்கான வரிகளை, கவிஞர் தாமரை எழுதியிருந்தார்.
இந்த பாடலின் வரிகள் அடங்கிய பாடல் யு-டியூபில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். இதுகுறித்து இமான் டுவிட்டரில், ‛‛கண்ணான கண்ணே பாடல், நூறு மில்லியன்(10 கோடி) பார்வையாளர்களைக் கடக்க வைத்த ரசிகர்களுக்கு நன்றிகள். இந்தப் பாடல் நிஜமாகவே நிறைய இதயங்களைச் சம்பாதித்து விட்டது. முறிந்து போன பல உறவுகளை மீண்டும் இணைய வைக்க உதவி புரிந்தது என்பதை உங்கள் மெசேஜ்களின் மூலமாக உணர்ந்து கொண்டேன். எனது இசைப் பயணத்தின் சிறந்த தருணமாக, இந்தப் பாடல் அமைந்த இந்தத் தருணத்தை உணர்கிறேன். சாதி, மதம், சமயம், நிறம் அன அனைத்தையும் தாண்டி, உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் அளவு,கடந்த அன்பைப் பரிமாறுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.

