குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், தமிழில் ‛இறுதிச்சுற்று’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். மேலும் இறுதிச்சுற்று படத்தின் மற்ற மொழி ரீமேக்குகளிலும் அவரே நடித்தார்.
அதைத்தொடர்ந்து ‛ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அசோக் செல்வனுடன் ‛ஓ மை கடவுளே’ படத்தில் நடித்துள்ளார். அருண் விஜய்யுடன் பாக்ஸர் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் ரித்திகா சிங் இன்ஸ்டாகிராமில் நேரலையில் வந்து ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர், ரித்திகா என்ற பெயருக்கு அர்த்தம் என்ன எனக் கேட்டார். அப்போது அவர், ரித்திகா எனும் பெயருக்கு தனக்கு அர்த்தம் தெரியாது என்றார். தன்னுடைய பெயரை சுருக்கி ரிட்ஸ் என பலர் அழைப்பார்கள் என்றும், ரித்திகா சிங் என்று தனது முழுப்பெயரையும் சொல்லி அழைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் தன்னை நூடுல்ஸ் மண்ட என்று தான் பலர் அழைப்பார்கள் என ரித்திகா தெரிவித்தார்.
யாரையாவது காதலிக்கிறீர்களா? என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என ஒரு ரசிகர் கேட்டதற்கு, தான் யாரையும் காதலிக்கவில்லை, எப்போதும் சிங்கிள் தான் என்றும் அவர் கூறினார். அதோடு, தான் ஐந்து பேரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், கேள்வி கேட்ட ரசிகரையும் திருமணம் செய்து கொள்ளத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

