தெலுங்கில் 2012ல் வெளிவந்த ‘லவ்லி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஷான்வி ஸ்ரீவத்சவா. அதன்பின் ‘அட்டா’, ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த ‘ரவுடி’, ‘பியார் மெயின் படிபோயானே’ ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்தார். இருந்தும் தொடர்ந்து அங்கு படங்களில் நடிக்காமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக கன்னட சினிமாவில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கன்னடத்தில் ‘மாஸ்டர் பீஸ், தாரக், முப்டி’ ஆகிய முக்கிய படங்களில் நடித்தவர், தற்போது ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ படத்தின் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய ஷான்வி தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடிக்க முடியாது பற்றிப் பேசினார்.
“நான் சிறியவளாக இருக்கலாம். ‘நான் பார்ப்பதற்கு அழகாக இல்லாமல் இருக்கலாம். சரியாக நடிக்காமல் இருக்கலாம். ‘ரவுடி’ படத்திற்குப் பிறகு எனக்கு தெலுங்கில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் முடங்கி இருந்தேன். தினமும் இரவில் அழுதிருக்கிறேன். எங்கோ நான் தவறு செய்திருக்கிறேன் என நினைப்பேன். அதனாலேயே ஐதராபாத்திற்கு வருவதைத் தவிர்த்தேன். இப்போது ‘அத்தடே ஸ்ரீமன்நாராயணா'(‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ – தமிழ்) படத்திற்காக வந்திருக்கிறேன். எனது திறமையை வெளிப்படுத்த இப்படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனக்கு ஆதரவு தாருங்கள்,” என கண்ணீர் மல்க பேசினார். அவருக்கு பத்திரிகையாளர்களும், படக்குழுவினரும் ஆறுதல் அளித்தனர்.

