நடிகர் ரஜினி நடிக்க, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தர்பார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, நடிகை நயன்தாரா, ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை, நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரஜினி ரசிகர்கள் பெரிய அளவில் சென்னைக்கு வந்து இருக்கின்றனர்.
இது குறித்து ரஜினி ரசிகர்கள் கூறியிருப்பதாவது: ரஜினி விரைவில் கட்சியைத் துவங்க இருக்கும் நிலையில், ரஜினியின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ரசிகர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என, ரஜினி மக்கள் நற்பணி மன்ற நிர்வாகிகளிடம் இருந்து தகவல் வந்தது. அதையடுத்து, இசை வெளியீட்டு விழாவுக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ரஜினி ரசிகர்கள் வந்துள்ளனர். ஒவ்வொரு நிகழ்ச்சி மூலமும், ரசிகர்கள் மூலம் நாட்டுக்கு அவர் செய்ய வேண்டியதையெல்லாம் ரஜினி சொல்வார். அதையெல்லாம் கேட்டு, நாங்கள் களத்தில் செயல்படுவோம். அதற்காகத்தான், ரஜினி நிகழ்ச்சிகளுக்கு தற்போது அழைக்கப்படுகின்றனர்.

