2015ம் ஆண்டு வெளியான பதல்பூர் படத்தில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அசத்தி இருந்தார் ராதிகா ஆப்தே. ஆனாலும், அவர் இப்படியெல்லாம் நடித்திருக்கக் கூடாது என்ற விமர்சனத்தையும் சிலர் வைத்தனர். காரணம் அப்படத்தில் இடம்பெற்ற கவர்ச்சியான நடிப்பும், ஆபாசமான வசனங்களும் இடம் பெற்று இருந்தன.
ஒருபக்கம் இதெல்லாம் கடும் விமர்சனத்தை கிளப்பி இருக்க, அதேபோன்ற கதைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு ராதிகா ஆப்தேவிடம் செல்கிறார்கள் பல இயக்குநர்கள். அதையெல்லாம் வரிசையாக மறுக்கும் ராதிகா ஆப்தே, அது பற்றி கூறியிருப்பதாவது:
சமூகத்தை பாதிக்கும் கொலை, கொள்ளை என எத்தனையோ சம்பவங்கள், பதல்பூர் படத்தில் பேசப்பட்டன. ஆனால், அதையெல்லாம் அப்படி அப்படியே விட்டு விட்டனர். என்னுடைய கேரக்டர் படத்தில் எப்படி இருக்கிறதோ, அதே போல கேரக்டரை உள்ளடக்கி புதிய கதையை யோசித்துக் கொண்டு, என்னை அதே மாதிரியான கேரக்டரில் நடிக்க அழைக்கின்றனர்.
பதல்பூர் படத்தில், நடித்திருக்கும் கேரக்டருக்கு தேவையான வசனங்கள் வைக்கப்பட்டன. கொஞ்சம் ஆபாசமான காட்சிகளும் கதைக்கேற்ப படமாக்கப்பட்டன. படத்துக்கு அதெல்லாம் உயிரோட்டமான காட்சிகள் என்பதால், ஆபாசம் பற்றி பதட்டப்படாமல் நடித்தேன். ஆனால், அதையெல்லாம் நான் விருப்பப்பட்டு நடித்தது போல நினைத்துக் கொண்டு, உங்களுக்காகவே ஸ்பெஷலாக ஒரு கதையை, பதல்பூர் கதை போல தயார் செய்திருக்கிறேன் என சொல்லி, ஆபாச காட்சிகளும், வசனங்களும் இருப்பது போல திரைக்கதையும் எழுதி, எடுத்துக் கொண்டு, என்னைத் தேடி வருகின்றனர்.அவர்களை நினைத்து பரிதாபப்படுகிறேன். வேறென்ன செய்ய முடியும்? என்னுடைய இலக்கெல்லாம் வேற. நான் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதற்காக, நான் நிறைய திட்டமிட்டிருக்கிறேன். அதன்படிதான், என் வாழ்க்கையை கொண்டு செல்வேன்.
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார்.

