நடிகராக இருந்து இயக்குனராக உயர்ந்து ‘மங்காத்தா’ படம் மூலம் அஜித்திற்கு ஒரு பெரிய திருப்புமுனை அமையக் காரணமாக இருந்தவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘மாநாடு’ படம் சர்ச்சைகளுக்குப் பிறகு ஆரம்பமாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனால், திட்டமிட்டபடி நடக்குமா, இல்லையா என்பது அவர்கள் முதல் நாள் படப்பிடிப்புக்குச் சென்ற பிறகுதான் தெரிய வரும்.
இந்நிலையில் சற்று முன், வெங்கட்பிரபு அவருடைய டுவிட்டரில், ராகவா லாரன்ஸுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றுடன் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “கடவுள் இரக்கமுள்ளவர். நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கும். அதனால் தான் இது நடந்துள்ளது. அப்டேட்ஸ் விரைவில்,” எனக் கூறியுள்ளார்.
ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘லட்சுமி பாம்’ படத்தை இயக்கி வருகிறார். தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. வெங்கட் பிரபுவின் பதிவைப் பார்க்கும் போது விரைவில் அவர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கலாம் எனத் தெரிகிறது.

