விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கணையாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். இதில் ஒருதலை காதலால் ஆசிட் வீசப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு காதல் கதையில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு மழையில் நனைகிறேன். இதில் ஆண்சன் பால் என்ற புதுமுகம் ஹீரோ. இவர்கள் தவிர ஷங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். விஷ்ணு பிரசாத் இசை அமைக்கிறார், ஜே.கல்யாண் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் டி.சுரேஷ் குமார் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
இது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான கருத்துக்களை பேசும் படமாகவும் இது இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள். வரலாறு முழுதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான் வெகு பிரபலம். காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக்கதைகளாக உலா வருகிறது.
ஆனால் இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது. திரையில் அந்த உணர்வுகளோடு கண்டுகளியுங்கள். உண்மையான காதலை, காதலர்களை பிரதிபலிப்பவர்களாக ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் தங்கள் அற்புத நடிப்பை இப்படத்தில் வழங்கியுள்ளார்கள் . என்றார்.

