பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பாடும் வானம்பாடி என பெயர் எடுத்தவர் லதா மங்கேஷ்கர்(90). ஹிந்தி, தமிழ், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட 36 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், தேசிய விருது, மாநில விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகள் அவரின் மகுடத்தை அலங்கரித்துள்ளன.
மும்பையில் வசித்து வரும் இவருக்கு நேற்று முன்தினம்(நவ., 11) மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமாக இருந்த அவரின் உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுப்பற்றி அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், லதா ஜி நலமாக உள்ளார். மோசமான நிலைக்கு சென்ற அவர், மிகவும் கடினமாக போராடியே நல்ல நிலைக்கு வர முடிந்தது. தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த லதா மங்கேஷ்கருக்கு, இதயத்தின் இடது கீழறையும் செயலிழந்திருக்கிறது. எனவே, ஐ.சி.யூ. அறையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என தெரிவித்துள்ளனர்.

