‛நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். அஜித்தின் 60வது படமாக உருவாக இருக்கும் அப்படத்திற்கு ‛வலிமை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அஜித் தவிர இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனாலேயே பல்வேறு யூகங்கள் உலா வருகின்றன. முதலில் இப்படத்தில் நஸ்ரியா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதனை அவர் தனது சமூகவலைதளப் பக்கம் மூலம் மறுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ‛வலிமை’ படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்பு எழில் இயக்கத்தில் ‛ராஜா’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
அப்போது அஜித், வடிவேலு இடையே ஏதோ கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர். அதோடு, ‛இம்சை அரசன்’ பட விவகாரம் தொடர்பாக வடிவேலு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‛மெர்சல்’ படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடித்திருந்தார்.
அடுத்ததாக கமலின் ‛தலைவன் இருக்கிறான்’ படத்தில் அவர் நடிப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. தற்போது அவர் ‛வலிமை’ படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் இது உண்மையா இல்லையா என்பது தெரிய வரும்.

