தமிழில் ‘ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில்’ என தான் இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்களை முன்னணி ஹீரோவான விஜய்யை வைத்து இயக்கி தன்னுடைய ஸ்டார் இயக்குனர் இமேஜை உயர்த்திக் கொண்டவர் அட்லி.
அந்த ஒரு அடையாளமே அட்லியை பாலிவுட் திரையுலகத்திலும் கொண்டு போய் சேர்த்துவிட்டது. ‘பிகில்’ படப்பிடிப்பு நடந்த போதே கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்னையில் ஹிந்தி நடிகர் ஷாரூக்கானை சந்தித்துப் பேசினார். அதன் காரணம் என்ன என்பது ‘பிகில்’ வெளியீட்டு சமயத்தில்தான் தெரிய வந்தது.
‘பிகில்’ படத்திற்குப் பிறகு ஷாரூக்கான் நாயகனாக நடிக்க உள்ள படத்தை அட்லி இயக்க உள்ளார். சமீபத்தில் ஷாரூக்கான் பிறந்த நாள் விழாவில் கூட தனது மனைவியுடன் கலந்து கொண்டார் அட்லி.
இந்நிலையில், ஷாரூக்கான் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்காக அட்லியை மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது உண்மையாக இருந்தால் அடுத்த சில வருடங்களுக்கு தமிழ் சினிமா பக்கம் வரமாட்டார் அட்லி.

