இண்டிகோ விமான ஊழியர்கள் உடைக்க முடியாததையும் உடைத்து விட்டார்கள் என பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
நடிகர் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர் பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா. தொடர்ந்து அவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வரும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், வரவில்லை. இந்நிலையில், அவர் சமீபத்தில் இண்டிகோ விமானத்தில் தன்னுடைய உடைக்க முடியாத சூட்கேசுடன் பயணித்தார்.
விமானப் பயணம் முடிந்து, சூட்கேசை பெற்றவருக்கு அதிர்ச்சி. சூட்கேசில் இருந்த கைப்பிடி, சக்கரங்கள் உடைந்து நொறுங்கி இருந்தன. உடைக்க முடியாத இவைகளை உடைத்து விட்டீர்களே என, அப்போதே விமான ஊழியர்களிடம் கொந்தளித்தார் நடிகை சோனாக்ஷி. வீடு திரும்பியவர், சூட்கேஸ் உடைந்ததால் ஏற்பட்ட மன வருத்தத்தில் இருந்தவர், தன்னுடைய மனக் குறைகளில் டுவிட்டரில் பதிவாக்கினார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சூட்கேஸ் உடைக்க முடியாதவையாக இருந்தது. அதை விமான ஊழியர்கள் எப்படி உடைத்தார்கள் என தெரியவில்லை. கைப்பிடியையும், சக்கரங்களையும் உடைத்திருக்கின்றனர். உடைக்க முடியாத சூட்கேஸில் இதையெல்லாம் உடைத்த விமான ஊழியர்களுக்கு என்னுடைய நன்றி என கூறியிருக்கிறார்.
அதை வீடியோவாக்கி, அதையும் ட்விட்டர் பதிவோடு இணைத்து விட, இண்டிகோ நிறுவனத்துக்கு எதிராக பலரும் கொந்தளிக்கின்றனர். தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையெல்லாம் பதில் ட்விட்டர் மூலம் பதிவிட்டு வருக்கின்றனர்.
இதையடுத்து, சோனாக்ஷியைத் தொடர்பு கொண்ட இண்டிகோ நிறுவன பணியாளர்கள், உங்கள் பிரச்னையை ஆராய குழு அமைத்திருக்கிறோம். அவர்கள் விசாரித்து வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் தகவலுக்குப் பின், உங்களைத் தொடர்பு கொள்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக வருந்துகிறோம். விரைவில் எங்கள் நிறுவனத்தில் இருந்து முழுமையான விவரங்களுடன் தொடர்பு கொள்வர் என கூறி உள்ளனர்.

