லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடித்து கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளிவந்த படம் ‘கைதி’. இப்படம் 12 நாட்களில் 80 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தெரிவித்துள்ளார்கள். படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட்டார்கள்.
தென்னிந்திய மாநிலங்களில் இப்படத்திற்கு விமர்சனமும், வரவேற்பும் அதிகமாக இருந்ததால் அது படத்தின் வசூலை அதிகரித்தது. விஜய் நடித்து வெளிவந்த ‘பிகில்’ படத்திற்கு சரியான போட்டியையும் இந்தப் படம் கொடுத்ததாக பலரும் தெரிவித்தார்கள். மேலும், ‘பிகில்’ கொடுக்கும் லாபத்தை விட ‘கைதி’ கொடுக்கும் லாபம் அதிகமாக இருக்கும் என்பதும் கோலிவுட் வட்டாரத் தகவல்.
கார்த்தி நடித்து இதுவரை வந்த படங்களுக்குக் கிடைத்த வசூலை விட இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் 12 நாட்களில் 80 கோடி வசூல் என்பது அவருக்கான புதிய சாதனைதான். இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் படம் வெளிவருவதற்கு முன்பே விஜய்யின் 64வது படத்தின் இயக்குனராகிவிட்டார். அவருக்கு இப்போது அதிக ‘டிமான்ட்’ ஆகிவிட்டது.
விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போவதாகவும், சூர்யா படத்தை இயக்கப் போவதாகவும், கமல்ஹாசன் படத்தை இயக்கப் போவதாகவும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும், அவர் விஜய் படத்தை முடித்துவிட்டு ‘கைதி 2’ படத்தைத்தான் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

