விஜய் நடித்த தெறி படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் மலையாள நடிகர் பினிஷ் பாஸ்டின். இவர் தற்போது மலையாள திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு இவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
அதே விழாவிற்கு ஓரளவு பிரபலமாக உள்ள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் என்பவரும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த விழாவிற்கு தான் மட்டுமே சிறப்பு விருந்தினராக இருக்க வேண்டும் என்று நினைத்த அனில் ராதாகிருஷ்ணன் மேனனுக்கு, விழா நடக்கும் அன்றைய தினம் தான் நடிகர் பினிஷ் பாஸ்டினும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என தகவல் கிடைத்தது.
இதனால் கோபமான அனில் ராதாகிருஷ்ணன் மேனன் மேடையில் நடைபெறும் கல்லூரி புத்தக வெளியீட்டில் மட்டும் தான் கலந்து கொள்வதாகவும் தான் சென்ற பின்னர் நடைபெற இருக்கும் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக பினிஷ் பாஸ்டின் கலந்து கொள்ளட்டும் என்றும், இருவரும் ஒரே மேடையில் இருப்பதை தான் விரும்பவில்லை என்றும் விழாக் குழுவினரிடம் கூறியுள்ளார். ஆனாலும் இந்த தகவல் எப்படியோ பினிஷ் பாஸ்டினுக்கு சென்று விட்டது.
இதையடுத்து அனில் ராதாகிருஷ்ணன் மேனன் மேடையில் இருக்கும் தருணத்திலேயே விழா அரங்கத்திற்குள் நுழைந்த அவர், விழா மேடைக்கு சென்று நாற்காலியில் அமராமல் தரையில் அமர்ந்து தன்னுடைய எதிர்ப்பை அனில் ராதாகிருஷ்ணன் மேனனுக்கு தெரிவித்தார்.. இதனால் அந்த விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.. இதைக் கண்டு திகைத்துப் போன அனில் ராதாகிருஷ்ணன் நிலைமை தனக்கு எதிராக மாறுவதை உணர்ந்தார்.
உடனே மைக்கை பிடித்து, தான் பினிஷ் பாஸ்டின் வருகை பற்றி அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்றும், தான் கூறியது பினிஷ் பாஸ்டின் மனதை வருத்தப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கேட்டுக் கொண்ட பின்பே சமாதானம் அடைந்தார் நடிகர் பினிஷ் பாஸ்டின்.

