ஜெயலலிதா வாழ்க்கை படம் தொடர்பாக இயக்குனர்கள் விஜய், கவுதம் மேனன் உள்ளிட்ட மூவர், நவ.,14க்குள் பதிலளிக்க சென்னை, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது
மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் வாழ்க்கை, சினிமாவாகவும், வெப் சிரீஸாகவும் உருவாகி வருகின்றன. இயக்குனர் விஜய், ‛தலைவி’ என்ற பெயரில் கங்கனாவை கொண்டும், இயக்குனர் பிரியதர்ஷினி, ‛தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் நித்யா மேனனை கொண்டும் படம் இயக்குகிறார்கள்.
இயக்குனர் கவுதம் மேனன், ‛குயின்’ என்ற பெயரில் ரம்யா கிருஷ்ணனை வைத்து வெப் சீரிஸ் இயக்குகிறார். இந்நிலையில், ஜெயலலிதாவின அண்ணன் மகள் தீபா, சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தவறாக சித்தரிக்கவில்லை என்கிற உத்தரவாதத்தை தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குனர்களிடம் அவர் கேட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று(நவ., 5) நீதிபதி கல்யாண சுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில் ஆஜரான வக்கில், ‛‛ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த படங்களின் திரைக்கதைகள் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்” என வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதி, நவ.,14க்குள் இயக்குனர்கள் விஜய், கவுதம் மேனன் உள்ளிட்ட மூவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

