”சென்னை தான், பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான நகரம்,” என, ‘சர்டிபிகேட்’ தருகிறார், கமலுக்கு அடுத்தபடியாக, திரையுலக வாழ்க்கையில், 60வது ஆண்டை நெருங்கும் நடிகை மற்றும் தயாரிப்பாளர், குட்டி பத்மினி. அவருடன் உரையாடியபோது:
திரையுலக வாழ்க்கையில், நீங்கள் சந்தித்த சவால்களில் உங்களுக்கு பிடித்தது எது?
என் வாழ்க்கையில் எல்லாமே, போராடி தான் கிடைத்தது. பாசமலர், கப்பலோட்டிய தமிழன், காத்திருந்த கண்கள், தெய்வமகள் என, பல படங்களில் நடித்தாலும், ஸ்ரீதரின், நெஞ்சில் ஓர் ஆலயம் தான், மக்களிடம் என்னை கொண்டு போய் சேர்த்தது. அன்று முதல், என் வாழ்க்கையில் அனைத்தையும் போராடி தான் பெற்று இருக்கிறேன். அது, எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. நமக்கு தேவையானதை போராடி பெறுவதில் தப்பில்லை.
திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்த உங்களின் மறக்க முடியாத தருணங்கள்?
இந்த ஒரு பேட்டியில், இதை சொல்ல முடியாது. என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என, மூன்று முதல்வர்களுடன் நடித்துள்ளேன். கடைசியாக, ராமானுஜர், ‘டிவி’ தொடர் தயாரித்த போது, கலைஞருடன் பணியாற்றியுள்ளேன். அண்ணாதுரை, காமராஜர், இந்திராகாந்தி ஆகியோர் கையால், விருது வாங்கியுள்ளேன். நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று தான் சொல்ல வேண்டும். அதே போல், நிறைய துன்பங்களும் நடந்திருக்கிறது.
நம்நாடு படத்தில், நாகிரெட்டியிடம் எம்.ஜி.ஆர்., சண்டை போட்டு, என்னை நடிக்க வைத்தார். ‘என்னடி என்னோட நடிக்க மாட்டியா நீ? அவ்ளோ பிஸ்தாவா?’ என, எம்.ஜி.ஆர். கேட்டது, மறக்க முடியாது. அதே போல், திருவருட்செல்வர் படத்தில் நடிக்கும் போது, சிவாஜி என் காலில் விழ வேண்டும். அந்த காட்சியை, படக்குழுவினர் யாருமே எதிர்பார்க்கவில்லை. சிவாஜியிடம் தான், தொழில் பக்தியை கற்றுக் கொண்டேன். இன்றளவும், நான், ‘சினிமா, டிவி, வெப்சீரிஸ்’ என, பயணிக்கிறேன் என்றால், அதற்கு அவர் தான் காரணம்.
புதிதாக நடிக்க வருபவர்களுக்கான வரவேற்பும், வாய்ப்பும் எப்படி இருக்கிறது?
யாருமே அவ்வளவு சுலபமாக, நடிகராகி விட முடியாது. வெறும் அழகு இருந்தால் மட்டும் போதாது. நல்ல தொடர்பு இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில், சினிமாவில் எனக்கு யாருமே வாய்ப்பு தரவில்லை. அந்த வலி எனக்கு தெரியும். அதனால், நான் திறமையானவர்களுக்கு வாய்ப்பு தர மறுப்பதில்லை.
வெப்சீரிஸ்க்கு சென்சார் இருந்தால் வரவேற்பீர்களா?
வெப்சீரிஸ்களை ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக சென்சார் இருக்கக்கூடாது. நிகழ்ச்சிக்குள், செக்ஸ் ஒரு கறிவேப்பிலை போல் தான். மொத்த நிகழ்ச்சியிலும், அந்த மாதிரி காட்சிகள் இருக்கக் கூடாது. இதுபோன்ற கதைகளை, 18 – 35 வயதுடையவர்கள் தான் அதிகம் பார்க்கின்றனர். இளைஞர்களுக்கான இதுபோன்ற கதைகளில், பட்டும் படாமல் செக்ஸ் இருக்கலாம்.
திரைத்துறை இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம்?
சின்ன பட்ஜெட்டில், வெற்றிப் படங்களை தர வேண்டும். ஹிந்திப் படங்கள் பல, 10 கோடி ரூபாயில் எடுத்து, 100 கோடி ரூபாய் லாபம் பார்க்கின்றனர். சமீபகாலமாக, தமிழிலும் அதுபோன்ற படங்கள் வருகிறது. இது இன்னும் தொடர வேண்டும். நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இது மிகவும் அவசியம்.
போலீஸ் குறித்த உங்கள் கருத்து?
என் மகள் இரவில், சென்னையில் வெளியே போய்விட்டு வந்தால், நான் தைரியமாக இருக்கலாம். நானும் நிறைய நகை போட்டு வெளியே சென்று வர முடிகிறது. சென்னை, ரொம்ப பாதுகாப்பாகவே இருக்கிறது. இதற்கு காரணம், காவல்துறை தான். போலீஸ் இல்லையென்றால், நாம் இரவில் சினிமா பார்த்து விட்டு வர முடியாது. பீஹார், ஹரியானா போன்ற மாநிலங்களில், இரவில் தைரியமாக நகை அணிந்து செல்ல முடியாது. போலீஸ் டைரி 2.0 மூலம், நிறைய குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. எந்த தப்பு செய்தாலும், ஏதாவது ஒரு தடயத்தை விட்டு விடுவான். அதுகுறித்த விழிப்புணர்வு, மக்களுக்கு இத்தொடர் வாயிலாக கிடைக்கும்.
உங்களின் அரசியல் ஆர்வம்?
பிரதமர் மோடியை எனக்கு பிடிக்கும். நான், பா.ஜ.,வில் தான் இருக்கிறேன். அந்த கட்சியில், முழு பலத்துடன் நான் இன்னும் நுழையவில்லை. என் சக நண்பர்கள் பலர், அரசியலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
யாருக்காக உங்கள் உரிமையை விட்டு கொடுப்பீர்கள்?
என் உரிமையை, யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். ஆனால், எனக்கு பிடித்ததை விட்டுத் தருவேன். விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். கூட்டுக் குடும்பம் ரொம்ப முக்கியம். இதை, தற்போதைய, ‘டிவி’ தொடர்கள் அழிப்பதாக நினைக்கிறேன். அதனாலேயே, ‘டிவி’ நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டேன். மனதுக்கு பிடிக்காத விஷயத்தை, கோடி ரூபாய் கொடுத்தாலும் செய்ய மாட்டேன்.

