பாரதிராஜா, இளையராஜா இருவரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்களாக இருந்தவர்கள். சினிமாவில் நுழைந்த பின் இவர்கள் இணைந்த படங்கள் வெற்றிப் படங்களாகவும், பாடல்கள் இன்றைக்கும் ரசிக்கும்படியாகவும் இருக்கின்றன.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா மேடையில் இளையராஜாவைப் பற்றி விமர்சித்துப் பேசிய பின் இருவரும் பிரிந்தார்கள். பதிலுக்கு இளையராஜாவும் பாரதிராஜா பேச்சு பற்றி வருத்தப்பட்டுப் பேசினார். அதன் பின் இருவரும் சந்தித்துக் கொள்ளவேயில்லை.
இந்நிலையில் இன்று(நவ., 1) தேனி, வைகை அணையில்திடீரென இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். ஒரே காரில் இருவரும் அமர்ந்துள்ள புகைப்படத்தை பாரதிராஜா அவருடைய டுவிட்டரில் வெளியிட்டு, “நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும், இணைந்தது…. இதயம் என் இதயத்தை தொட்டது, என் தேனியில்” என்று குறிப்பிட்டுள்ளார்.

