‘அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்…’ என்ற வசனத்தை, யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. நடிகர் வடிவேலுவுடன் இந்த காமெடியில் அசத்தி, மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான், ‘டெலிபோன்’ ராஜ். கிட்டத்தட்ட, 2,000க்கும் மேற்பட்ட நாடகங்கள், 50க்கும் மேற்பட்ட நெடுந்தொடர்கள், 200க்கும் மேற்பட்ட படங்கள் என, திரையுலக வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கும் அவர், தன் பயணம் குறித்து நம்முடன் பேசியதிலிருந்து:
உங்கள் சொந்த ஊர்?
கன்னியாகுமரி மாவட்டம், பால்குளம், என் சொந்த கிராமம். 1979ல், சினிமாவில் நடித்து பெரிய ஆள் ஆகலாம் என, கங்கணம் கட்டி, 17 வயதில் சென்னை வந்தவன் நான்.
சென்னையில் ஆரம்ப கட்ட பயணம் எப்படி இருந்தது?
சினிமாவில் நடிக்க, ஓராண்டு அலைந்து திரிந்த நான், வந்த இடத்தில், சாப்பாட்டுக்கே வழி இல்லாமல், சாப்பாட்டுக்காக வேலை பார்க்க வேண்டியதாகி விட்டது. சாப்பாடு மட்டும் போட்டால் கூட போதும் என்ற நிலையில், பல வேலைகளை பார்த்தேன். அப்படியே, ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி இறங்கினேன். பூக்கடையில் உள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வேலை இருப்பதாக அறிந்து, அங்கு சென்றேன். கேன்டீனில் வேலை கிடைத்தது. 1997 வரை, கேன்டீன் வாழ்க்கை தான். அலுவலக விழா ஒன்றில், கேன்டீன் ஊழியர்கள் சார்பில், நான் கதை எழுதி, இயக்கி நடித்த என் முதல் நாடகத்தை அரங்கேற்றினேன்.
மவுலியின் நாடகக் குழுவில் இணைந்தது எப்படி?
என் நாடகத்தை பார்த்த மவுலியின் இணை இயக்குனர் சங்கர், சினிமாவில், பொருத்தம் என்ற படத்தில் வினு சக்ரவர்த்தியுடன் நடிக்க வைத்தார். அதில், நன்றாக நடித்தேன். அதன் பின், மவுலியின் நாடகக் குழுவில் இணைந்தேன். 1983 – 93 வரை, மவுலியின் நாடகக்குழுவில் நடித்தேன். அப்போது, ஒரு நாடகத்திற்கு, 5 ரூபாய் சம்பளம். ஒரு நாளுக்கு மூன்று நாடகம் என்றால், 15 ரூபாய் கிடைத்தது.
வெளியூர் என்றால், 10 ரூபாய் கிடைக்கும். மவுலியின், ‘பிளைட் நம்பர் – 172’ என்ற நெடுந்தொடரில், ‘பையாலு’ என்ற பாத்திரத்தில், அரைவட்ட தலைமுடியுடன் நடித்தேன். அதை பார்த்துவிட்டு செவன்த் சேனலின், ‘மரியாதை ராமன்’ உள்ளிட்ட பல சீரியல்களில், நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாக்யராஜின், ‘ஒரு கதையின் கதை’ என்ற சீரியலிலும் நடித்தேன். ஏ.வி.எம்.,மின், ‘கீதாஞ்சலி’ தொடரில் மணி பாத்திரத்தில் நடித்தேன்.
வடிவேலு உங்களை நடிக்க வைக்கக் கூடாது என்றாராமே?
நாடகத்தை தொடர்ந்து, சின்ன சின்ன வேடங்களில் சினிமாவில் தலை காட்டிய போது, ஒரு நாள், வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் நடித்த, பகவதி படத்தில், சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில், வடிவேலுவுடன் இணைந்து நடிக்க வேண்டும். ஆனால், வடிவேலு என்னை நிராகரித்தார். ‘அவன் யார் என்றே எனக்கு தெரியாது. அவன் நடிக்கக் கூடாது’ என்றார்.
நான் அவரிடம் சென்று சண்டை போட்டேன். ‘இயக்குனர் தான் என்னை தேர்வு செய்தார். அறிமுகம் இல்லை என்றால் நடிக்கக் கூடாதா?’ என, கேள்வி எழுப்பினேன். ‘உங்களுடன் நடிக்க போகிறேன் என அறிந்து, கோவிலில் வேண்டிக் கொண்டு, 10 ஆயிரம் பேரிடம் இதைப்பற்றி சொல்லி விட்டு வந்தேன்’ என்றேன். அதன்பின், என்னை ஒரு வசனத்தை சொல்லி நடிக்க வைத்தார். அவரிடம், நடித்துக் காட்டிய பின், என்னை வடிவேலு ஏற்றுக் கொண்டார். ஆனால், அவருடன் நான் நடித்த சீன், படத்தில் இடம் பெறவில்லை.
அதன்பின், அன்பு என்ற படத்தில் மீண்டும் வடிவேலு உடன் நடித்தேன். டெலிபோன் காமெடியில், அவருடன் நடித்தேன். அதன்பின், அவரே சில படங்களில், என்னை சிபாரிசு செய்தார். வாத்தியார் போன்ற, 20 படங்களில், வடிவேலுவுடன் நடித்தேன். 200 படங்களில் நடித்தாலும், வடிவேலுவுடன் நடித்த படங்கள் தான், என்னை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது.
மறக்க முடியாத பாராட்டு?
மத்திய பிரதேசத்தில் நடந்த நாடகப்போட்டி ஒன்றில், தமிழகம் சார்பில், நான் எழுதி, இயக்கி, நடித்த, ‘பந்தன் உறவுகள்’ என்ற நாடகம், சிறந்த நாடகமாகவும், சிறந்த நடிகராகவும், எனக்கு விருதும், பாராட்டும் பெற்று தந்தது. மொழி தெரியாத நிலையிலும், நாடகத்தை பார்த்து பலர் அழுதனர். ரசிகர்கள் பலர் என்னுடன், ‘செல்பி’ எடுத்தனர். சமீபத்தில், விளம்பரத்திற்காக சிறந்த மாடல் என்ற விருதுடன், திரைத்துறையில், நுாற்றுக்கணக்கான விருதுகளை பெற்றுள்ளேன்.
மறக்க முடியாத சம்பவங்கள்?
சினிமா ஆசையில், பெற்றோரை விட்டு, 17 வயதில் சென்னை வந்த நான், அவர்களின் பாசத்தை இழந்து விட்டேன். கடைக்குட்டி சிங்கம் படத்தில், பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்தேன். அப்போது, சாப்பிட சென்றபோது, சாப்பாடு பரிமாறுபவர், என் தட்டை பிடுங்கி, ‘ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லாம் அங்கே போய் சாப்பிடுங்க’ என சொன்னது, அவமானமாக இருந்தது. கடைசி வரை நான் அங்கு சாப்பிடவில்லை.
சமீபத்தில், முதன்முதலாக விஜய் சேதுபதியுடன், சங்கத்தமிழன் படத்தில், நான் மூன்று காட்சியில் நடித்தேன். இறுதியில், அவை அனைத்தையும் துாக்கி விட்டனர். நான் நடித்து, ‘கட்’ செய்த, வெளிவராமல் போன படங்கள் மட்டுமே, 80க்கும் மேல் இருக்கும். வடிவேலு பட காமெடி போல், சினிமாவுக்கு நான் ஒரு ஊத்தப்பம் தான்.
சினிமாவில் தற்போது காமெடி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறதே?
இன்று காமெடி என்ற பெயரில், பலர் வந்து போகின்றனர்; அவ்வளவு தான். வடிவேலு மாதிரி ஒரு நடிகன், இனி பிறக்கப் போவதில்லை. நம்மை விட அதிகமாக நடிப்பவர்களை மதிப்பவர் வடிவேலு; திறமைக்கு மதிப்பளிப்பவர். இன்று சினிமா உலகம், அவரை மறந்து விட்டது. தனக்கு பிடிக்காத விஷயத்தை, அவர் செய்யமாட்டார். இது தான், அவரின் இன்றைய நிலைக்கும் காரணமாகி விட்டது. அவர் மீண்டும், சினிமாவுக்கு வர வேண்டும்.
தற்போது நடித்து வரும் படங்கள்?
டானா, பட்டாசு, மல்லி, டகால்டி, படவா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்.உங்கள் எதிர்கால திட்டம்?விரைவில் படம் ஒன்றை இயக்க உள்ளேன். அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

