புறம்போக்கு படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் லாபம். இதனை விஜய் சேதுபதி தயாரித்து, நடிக்கிறார். ஸ்ருதிஹாசன், கலையரசன், பிருத்வி, டேனி, தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார். படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் கூறியதாவது:
படத்தின் டைட்டில் லாபம் என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள். இந்தப்படம் யாருக்கு லாபம் என்பதையும், எது லாபம் என்பதையும் பேசும். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்தி தான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும் தான் பிரிட்டிஷ்காரர் கண்களை உறுத்தியது. நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத்தான் பிரிட்டிஷ்காரர்கள் இங்கே 300 வருடம் டேரா போட்டானர்.
விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட நம்நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது? தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால்? என்பதை என்னுடைய ஸ்டைலில் இப்படத்தில் சொல்லி இருக்கிறேன். இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனை சர்வதேச பிரச்சனை. அதை படம் விரிவாகப் பேசும். என்றார்.

