முதல்வர் வீட்டு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்திருந்தால் அதை இந்நேரம் மீட்டிருப்பார்கள் என ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சனை மீட்கும் முயற்சி கடந்த 4 நாட்களாக நடந்தது. அவர் பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என திரையுலகப் பிரபலங்களும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்திருந்தனர். ஆனால் சுஜித் மறைந்துவிட்டார்.
இதுதொடர்பாக மீரா மிதுன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “எல்லோரும் துரிதமாக வேலை செய்தார்கள். ஆனால், நம் முதல்வர் ஏன் இந்த விசயத்தில் நேரடியாக இறங்கவில்லை என்பது எனக்கு வருத்தத்திற்குரிய ஒன்றாக உள்ளது. இதுவே முதல்வர் அல்லது அவரின் உறவினரின் குழந்தையாக இருந்திருந்தால், இந்நேரம் அதனைக் காப்பாற்றி இருப்பார்கள் அல்லவா. இதே ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் துரிதமாக இந்த வேலை நடந்திருக்குமோ என்று எனக்கு தோன்றுகிறது” என மீரா பேசியுள்ளார்.
சமீபகாலமாக பிரபலங்களைத் திட்டி வீடியோ வெளியிடுவதை மீரா வழக்கமாகக் கொண்டிருக்கிறார். நடிகர் கமல், சேரன், முகென் என எல்லோரையும் நேரடியாகத் தாக்கி பேசி அவர் ஏற்கனவே வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போது ஒருபடி மேலே போய், தமிழக முதல்வரையே நேரடியாக விமர்சித்து மீரா வீடியோ வெளியிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

