தமிழ்நாட்டில் வந்து தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பவர்களை தமிழ் மக்களுக்கு உடனே பிடித்துப் போய்விடும். ஹாலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக ஆரம்பித்ததும் ஹாலிவுட் ஹீரோக்கள் கூட தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் அறிமுகமாகிவிட்டார்கள்.
தெலுங்குப் படங்கள்தான் தமிழில் அதிகமாக டப்பிங் ஆகும். சமீப காலங்களில் ஹிந்திப் படங்களும் தமிழில் டப்பிங் ஆகி வெளியாக ஆரம்பித்துவிட்டன. பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்கும் ‘தபங் 3’ படம் ஹிந்தியில் எடுக்கப்பட்டாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.
நேற்று அப்படத்தின் டிரைலர் நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. ஹிந்தி டிரைலரைப் பற்றி ஆங்கிலத்தில் பதிவிட்டு டுவீட் செய்த சல்மான் கான், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி டிரைலர்களை அந்தந்த மொழிகளில் டுவீட் செய்து வெளியிட்டுள்ளார்.
‛‛வணக்கம் உங்கள் பொன்னான நேரத்திலிருந்து ஒரு 3 நிமிடங்கள் ஒதுக்கி தபங் 3 டிரைலரை பாருங்கள்” என டுவீட் செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட ரசிகர்கள் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்தாலும் ஹிந்தி ரசிகர்கள் மட்டும் சல்மானின் ஆங்கில டுவீட்டிற்கு கண்டிப்பாக கோபப்பட்டிருப்பார்கள்.

