தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த ‛கைதி’ படம் வெளிவருகிறது. படத்தில் ஹீரோயின் கிடையாது, பாடல் கிடையாது. 4 மணி நேரத்தில் நடக்கும் கதை, அதுவும் இரவில் நடக்கும் கதை என பல புதுமைகளுடன் வெளிவருகிறது. இதனை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படம் பற்றி கார்த்தி கூறியதாவது:
ஒரு சில படங்கள் நடிக்கும்போதே நமக்கு ஏதோ புதுசா பண்ணுகிறோம் என்கிற உணர்வு இருக்கும். கைதி அது மாதிரி ஒரு பரிசோதனை முயற்சி. வித்தியாசமான சில விஷயங்கள் இருக்கின்றன. மற்றபடி இது ஒரு ஜனரஞ்சகமான படம் தான். ரசிகர்கள் ரசிக்கிற மாதிரி உருவாக்கி இருக்கிறோம்.
இது விருதுக்காக எடுத்த படமும் கிடையாது. ஆனால் காதல் இல்லையா, காமெடி இல்லையானு கேட்கிறது இந்தப்படத்துக்கு ஒரு பப்ளிசிட்டியா மாறிடுச்சு. இந்தப்படத்துக்கு அதெல்லாம் தேவைப்படல அவ்வளவு தான்.
ஹாலிவுட்டில் வர்ற ஸ்பீட், டை ஹார்ட் மாதிரி படம் தான் இதுவும். அந்தப்படங்களோட அடிப்படையே ஆக்ஷன வச்சு தான் உருவாகியிருக்கும். அந்த மாதிரி ஒரு படம் தான் இது. என்ன சர்ப்ரைஸ்னா இதில அதுக்குள்ள பலரதரப்பட கேரக்டர்கள் இருக்கும். ஒரு இரவுல உச்சபட்ச சூழ்நிலைக்கு தள்ளப்படுற கேரக்டர்ஸ். எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும். படத்துல நான் ஒரு கைதியாக நடிக்கிறேன். இந்த மாதிரி கதைகள் எனக்கு பிடித்ததால் தேடி தேடி பண்றேன் என்றார்.

