தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் மட்டுமல்லாது, பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவரும் போதும் அதிகாலை காட்சிகள் நடப்பது வழக்கம். இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த ‘விஸ்வாசம், பேட்ட’ படங்களுக்கு நடு இரவுக் காட்சிகள், அதிகாலை 4 மணி காட்சிகள் என நடந்தன. ரஜினிகாந்த், அஜித் ரசிகர்கள் அந்த நேரத்திலும் திரண்டு வந்து படங்களைப் பார்த்தார்கள்.
அப்போது ‘விஸ்வாசம்’ படத்திற்கு 1000 ரூபாய் கட்டணமும், ‘பேட்ட’ படத்திற்கு 500 ரூபாய் கட்டணமும வசூலிக்கப்பட்டன. பொங்கலுக்கு அடுத்து தீபாவளி நாள் தான் சினிமாவில் கொண்டாட்டமான நாள். இந்த வருட தீபாவளிக்கு ‘பிகில், கைதி’ படங்கள் வெளிவருகின்றன. இருந்தாலும் ‘பிகில்’ படத்தை அதிகாலை காட்சி பார்த்துவிட விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால், அரசு தரப்பில் இன்னமும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தரப்பில் அரசிடம் பேசிக் கொண்டிருப்பதாக திரையுலகில் சொல்கிறார்கள்.
சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை 500, 1000, 2000 ரூபாய் என ஊருக்கேற்றபடி, தியேட்டர்களுக்கு ஏற்றபடி வைத்து விற்பதாக புகார் வந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளார்கள்.
இதனிடையே, ‘பிகில்’ படத்திற்கு சில ஊர்களில் சில தியேட்டர்களில் அதிகாலை 4 மணி, 5 மணி காட்சிகளுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கான டிக்கெட் கட்டணங்கள் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பதாகவும் தகவல் வந்துள்ளன.
‘பிகில், கைதி’ படங்கள் வெளிவர நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளதால் இனிமேலும் அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்குவது சந்தேகம் என்றே தெரிகிறது.

