‛மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரத்னகுமார், அடுத்ததாக இயக்கிய படம் ‛ஆடை’. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டடத்தில் ஆடையின்றி நிர்வாணமாக மாட்டிக் கொள்ளும் ஒரு பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் படத்தின் கதை. இதில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கடந்த ஜூலை 19-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. காரணம் நிர்வாண காட்சிகள் ஆபாசமின்றி படமாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் ரத்னகுமார். பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமலாபால் கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனா ரணாவத்திடம் பேசி வருகின்றனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

