தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர். சினிமாவைத் தாண்டி, அரசியல் ஆர்வமெல்லாம் இல்லாதவர். ஆனால், கார் ரேஸிங், ஏரோ மாடலிங், சமையல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தன்னுடைய திறனை வளர்த்துக் கொண்டு, சாதனை படைத்து வருபவர். தற்போது துப்பாக்கி சுடும் போட்டியிலும் கலந்து கொண்டு, தன்னுடைய திறமையைக் காட்டி வருகிறார்.
சமீபத்தில், கோவையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்றார். அதில் ஒரு நிலையை அடைந்தவர், அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார். இதையடுத்து, டில்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டார். அஜித் பங்கேற்ற தேசிய பயிற்சிப் போட்டியின் முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்தப் போட்டிகளில் மொத்தம் மூன்று பிரிவில் அவர் பங்கு பெற்றுள்ளார். அதில், ப்ரீ பிஸ்டல் பிரிவில் எட்டாவது இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் ஒன்பதாவது இடத்தையும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் பனிரெண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். இதை, அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

