மேகா படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. அவர், தற்போது கட்டில் என்ற படத்தில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
இது குறித்து, சிருஷ்டி டாங்கே கூறியிருப்பதாவது:
படத்தின் தலைப்பை மட்டும் பார்த்து விட்டு, பலரும் படம் ஆபாச படமாக இருக்கும் என கற்பனை செய்துக் கொள்ளத் தேவையில்லை. படம், முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக எடுக்கப்படுகிறது.
கட்டிலுக்கும், குடும்ப அமைப்புக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அதை காட்டவே இந்தப் படம். ஒவ்வொருவரது குடும்பத்திலும், உறவு முறைகள் வெவ்வேறாக இருக்கும். ஆனால், அவர்களுக்கு இடையில் இருக்கும் பாசப் போராட்டம் ஒன்றுதான். அது தான் இந்தப் படம்.
முழுக்க முழுக்க எமோஷனல் டிராமா. இப்படத்தை விருதுக்கு அனுப்பும் முயற்சியில் தான், இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், இப்போதுதான், குடும்பப் பெண்ணாக நடித்திருக்கிறேன். இதுவரை எனக்கு கொடுத்த அனைத்து கதாபாத்திரத்திலும், நான் கச்சிதமாக நடித்து இருந்தாலும், அதிலெல்லாம் எனக்கு முழுமையான திருப்தி கிடைக்கவில்லை. இருந்த போதும், பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
கட்டில் படத்தில் என்னுடைய நடிப்பை பார்ப்பவர்கள், எனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளைத் தரக் கூடும். இந்தப் படம் எப்படியும் விருது வாங்கும்.
இவ்வாறு சிருஷ்டி கூறியிருக்கிறார்.

