2003ல் ஜெகன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் புதிய கீதை. இந்த படத்தில் மீரா ஜாஸ்மின், அமீஷா பட்டேல் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்தனர். இந்த அமீஷா பட்டேல் ஹிந்தியில் இப்போதுவரை நடித்து வருகிறார். அதோடு படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில், 2018ம் ஆண்டு ஒரு ஹிந்தி படம் தயாரிக்க தனது பார்ட்னர் ஒருவருடன் இணைந்து அஜய்குமார்சிங் என்பவரிடம் 2.5 கோடி கடன் வாங்கியிருந்தார். ஆனால் அந்த படத்தை இதுவரை அமீஷா பட்டேல் தயாரித்து வெளியிடவில்லையாம். அதனால் அந்த படத்தை நம்பி அவரிடத்தில் பணம் கொடுத்திருந்த அஜய்குமார்சிங் 2.5 கோடியை திருப்பி கேட்டிருக்கிறார்.
அதையடுத்து அசலும், வட்டியும் சேர்த்து ரூ. 3 கோடிக்கான செக் கொடுத்துள்ளார் அமீஷா பட்டேல். ஆனால் அந்த செக் பவுன்ஸ் ஆகி விட்டதாம். இதனால் அஜய்குமார் சிங், நடிகை அமீஷா பட்டேல் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்ததை அடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

